கறிமிளகாயில் இருந்து உப்பு கறிமிளகாய் வற்றல் செய்து பெறுமதி சேர்த்து இலாபம் பெறுவோம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிப்பயிர்களில் ஒன்றாக கறிமிளகாய் காணப்படுகிறது. தீவகப்பிரதேசங்களில் ஜப்பசி கார்த்திகை மாதங்களில்; கறிமிளகாய் பயிர் கூடுதலான விஸ்தீரணத்தில் பயிரிடப்படுகிறது. வேலணை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 12ஹெக்ரயர் விஸ்தீரணத்தில் கறிமிளகாய் பயிர்ச் செய்கை இடம்பெறுகிறது. கறிமிளகாய் செய்கையின் போது முதல் 6 தடவைக்கான அறுவடை மார்கழி, தை, மற்றும் மாசி மாதங்களில் இடம்பெறுகிறது. இக் கறிமிளகாய் ஒரு கிலோ ரூபா 200/= தொடக்கம் ரூபா 300/= வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் 6 அறுவடையின் பின்பு காய்க்கும் கறிமிளகாய் ஆனது குறைந்த தரத்துடனிருப்பதால் 01முப கறிமிளகாய் ரூபா 30/= தொடக்கம் 40/= வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சரவணை கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் விவசாயியான நாகரட்ணம் ஜெயக்குமார் அவர்கள் கறிமிளகாயிலிருந்து உப்பு கறிமிளகாய் வற்றலினை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை தனது சுயமுயற்சியினூடாக கண்டுபிடித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தை அவரே வேறுபட்ட அளவுகளில் பல தடவைகள் பிரயோகித்து, இறுதியாக பொருத்தமான அளவுகளினூடாக, இவ் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தியுள்ளார்.

வேலணை விவசாயப் போதனாசிரியர் காளிதாசன் வதனா அவர்கள் 29.04.2020 ஆம் திகதி நாகரட்ணம் ஜெயக்குமார் என்ற விவசாயி மூலம் உப்பு கறிமிளகாய் வற்றல் தயாரிக்கும் முறையினை திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் செய்து காட்டினார்.

உலர்த்தப்பட்ட 01 கிலோ உப்பு கறிமிளகாய் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள்

1. கறிமிளகாய்: 04 KG
2. கறிஉப்பு : 01 KG
3. தண்ணீர் : 06 லிற்றர்

செய்முறை

1.கறிமிளகாயைக் கழுவி துடைத்து நடுவில் கீறு போட்டு 05 மணித்தியாலம் சூரிய ஒளியில் வைத்தல் வேண்டும்.
2.6 லிற்றர் தண்ணீரை 05 மணித்தியாலம் வரை சூரிய ஒளியில் வைத்தல். இதன் வெப்பநிலையானது அண்ணளவாக 50 பாகை செல்சியஸ் அல்லது நகச்சூடு நிலையினை அடைந்திருக்கும்.
3.வெயிலில் 05 மணித்தியாலம் வைத்து எடுக்கப்பட்ட கறிமிளகாயை முதலில் ஒரு அடுக்காக இட்டு அதன் மேல் உப்பை இடுதல் வேண்டும். இவ்வாறு படிப்படியாக கறிமிளகாயையும் உப்பையும் மாறி மாறி படையாக இடுதல் வேண்டும். (உப்பானது கறிமிளகாய் மீது சமச்சீராக பரவுவதற்காக)
4.சூரிய ஒளியில் 05 மணித்தியாலம் வைத்து எடுக்கப்பட்ட நீரையும் கறிமிளகாய் – உப்பு படையுடன் சேர்த்து பொலித்தீனால் இறுக மூடி 24 மணித்தியாலங்கள் ஊறவிடல் வேண்டும்.
5.இவ்வாறு ஊறவிடப்பட்ட உப்பு சேர்க்கப்பட்ட கறிமிளகாயை தொடர்ச்சியாக 05 நாட்களிற்கு வற்றலாகும் வரை வெயிலில் காயவிடுதல் வேண்டும்.

சந்தையில் மலிவான காலங்களில் கறிமிளகாய் விற்பதற்கு பதிலாக நல்ல தரத்திலான உப்பு கறிமிளகாய் வற்றலாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதன் மூலம் கறிமிளகாய்க்கான சந்தை பெறுமதி அதிகரிக்கும். இதன் மூலம் மேலதிக வருமானத்தினையும் பெற்றுக் கொள்ளமுடியும். அத்துடன், சந்தைப்படுத்த முடியாமல் வீண்விரயமாவதைக் குறைக்கலாம். 4kg கறிமிளகாயில் இருந்து 01kg உப்பு கறிமிளகாய் வற்றலினை உற்பத்தி செய்ய முடியும். கூலியுடன் சேர்த்து இதற்கான உற்பத்திச் செலவு ரூபாய் 360.00 ஆகும். குடும்ப உறுப்பினர்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது உற்பத்திச் செலவு ரூபா 220/= ஆகும். உப்பு கறிமிளகாய் வற்றலின் விற்பனை விலை 500/= தொடக்கம் 600/= ரூபாவாகக் காணப்படுகிறது. தற்சமயம் நாட்டில் நிலவும் COVID 19 காலப்பகுதியில் மலிவாகக் கிடைக்கும் கறிமிளகாயினை உப்பு கறிமிளகாய் வற்றலாகப் பெறுமதி சேர்த்து இலாபம் பெறுவோம்.

மேலும் ஒவ்வொரு வீட்டின் குடும்ப உறுப்பினர்களும் இந் நடைமுறைக்கு ஊடாக தமக்குத் தேவையான உப்பு கறிமிளகாய் வற்றலினை உற்பத்தி செய்து பயன்படுத்த முடியும். இதனூடாக உப்பு கறிமிளகாய் வாங்குவதற்கு செலவு செய்யப்படும் தொகையினை சேமிக்க முடியும்.